கடுமையான சர்சைக்கு பின் கர்நாடக சட்டப்பேரவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு!

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் இதுவரை அவைக்கு வரவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா காலை 10 மணிக்கே கர்நாடக சட்டப்பேரவையான விதான் சவுதாவுக்கு வந்துவிட்டார். ஹோட்டல் ஹில்டனில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் காலை 10.30 மணியளவில் சொகுசு பேருந்து மூலம் புறப்பட்டு விதான் சவுதா சென்றனர்.

பாஜக எம்எல்ஏ.க்கள் சங்கரிலா ஹோட்டல் என்ற நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தி விட்டு சொகுசு பேருந்து மூலம் விதான் சவுதா புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் முதலமைச்சர் எடியூரப்பாவும் பேருந்திலேயே பயணமானார்.

காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை கர்நாடக சட்டப்பேரவைக்கு வரவில்லை. எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment