ஐபிஎல் போட்டியின் போது காவலரை தாக்கியதன் எதிரொலி !பாரதிராஜா காவல் ஆணையரிடம் நேரில் சென்று புலம்பல் !

இயக்குநர் பாரதிராஜா,ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு காவல் ஆணையரை நேரில் சந்தித்து  வருத்தம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் போராட்டத்தின் கவனம் திசை திரும்பும் என்பதாலும் காவிரி போராட்டத்தை நாடு முழுவதும் கவனத்துக்கு உள்ளாக்குவதற்காகவும் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பை மீறி கடந்த 10-ம் தேதி போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் சிலர் போலீஸார் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.

பின்னர் வெளியே வந்த பாரதிராஜா கூறும்போது, “கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக நடைபெற்ற பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கவும் நடந்த ஒரு சில அசம்பாவிதங்களுக்கு வருத்தம் தெரிவிக்கவும் வந்தோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் காவல் ஆணையரிடம் தெரிவித்தோம். உலகம் முழுக்க பார்க்கும் ஐபிஎல் போட்டியை கவனத்தை ஈர்க்கவே எதிர்ப்பு தெரிவித்தோம்” என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment