அடிமேல் அடிவாங்கும் தினகரன்!டிடிவி தினகரன் அணியில் இருந்து கொள்கை பரப்பு செயலாளர் விலகல்…

நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் ஆரம்பித்த ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ அணியில் இருந்து  அதிரடியாக விலகியுள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டனர். இரு அணிகளும் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில் தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இருஅணிகளின் வேட்பாளர்களும் சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்ட நிலையில், அத் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரின் நியமனம் செல்லாது என கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், டி.டி.வி.தினகரன் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தனக்கு குக்கர் சின்னம் மற்றும் தனது அமைப்பின் புதிய பெயருக்கு அனுமதி அளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் குக்கர் சின்னத்துக்கு அனுமதி அளித்தும், அவரது அமைப்புக்கு விரும்பும் பெயரை அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.டி.வி.தினகரன், தனது புதிய அமைப்பின் தனது அமைப்பின் பெயரை ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று கடந்த வியாழக்கிழமை (மார்ச்.15) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். மேலும் கருப்பு-வெண்மை-சிவப்பு வண்ண கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ள அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார்.இந்நிலையில், தினகரன் தொடங்கி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனக்கு உடனப்பாடு இல்லை என கூறி நாஞ்சில் சம்பத் அதிரடியாக விலகியுள்ளார்.

தினகரன் அறிவித்த கட்சி பெயரில் அண்ணா, திராவிடத்தை ஒதுக்கிய தினகரன் அணியில் நான் இல்லை. அண்ணா, திராவிடத்தை விலக்கிவிட்டு தினகரனால் அரசில் நடத்த முடியாது என்றார்.மேலும் இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க மாட்டேன் எனவும் இலக்கிய மேடைகளில் இனி என்னைக் காணலாம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.இது தினகரனுக்கு பெரிய அடியாக அமைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment