சென்னையில் நிலுவைத் தொகை வழங்காத உபேர் நிறுவனத்தை கண்டித்து, தீக்குளிக்க முயற்சித்த ஓட்டுனர்!

சென்னை அருகே  உபேர் கால் டாக்சி நிறுவனம் நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து, ஓட்டுனர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை ஆலந்தூரில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் நிலுவைத் தொகைகளை தரவில்லை என்று புகார் கூறி, ஏற்கனவே ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உபேர் அலுவலகம் சென்ற ஓட்டுனர்கள் சிலர், உடனடியாக நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது குமரேசன் என்ற ஓட்டுனர் திடீரென உபேர் நிறுவனத்தின் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

ஓட்டுனர் குமரேசனை மீட்ட போலீசார், பரங்கிமலை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குமரேசனுக்கு உபேர் நிறுவனம் 6 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கி கடன் மூலம் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வரும் நிலையில், உபேர் நிறுவனம் நிலுவைத் தொகை வழங்காததால், கடன் வாங்கி இஎம்ஐ செலுத்த வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment