#Breaking:உச்சகட்டம்…டயர் பஞ்சர்;தண்ணீர் பாட்டில் வீச்சு – இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ்?..!

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார்.

அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஒற்றைத் தலைமை வேண்டும் என்று 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு கடிதம் எழுதிய நிலையில்,அதனை மேடையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வாசித்தார்.பின்னர்,அதனை அவைத்தலைவரிடம் வழங்கினார்.

இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து பாதியிலேயே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.இதனைத் தொடர்ந்து,சட்டத்திற்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாகவும்,கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டினார்.

ADMKmeeting

அதிமுக பொதுக்குழுவிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,அவர் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நிறைவு பெற்றது.எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்றது.

இந்நிலையில்,இன்று மாலை 6 மணிக்கு ஓபிஎஸ் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது,ஒற்றைத் தலைமை குறித்து சட்ட ரீதியாக தான் எடுக்க கூடிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓபிஎஸ் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment