Connect with us

திருச்செந்தூர் அருகே கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்!

ஆன்மீகம்

திருச்செந்தூர் அருகே கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது.

அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் வேடமிட்ட பக்தர், கடை வீதிக்கு சென்று ஒவ்வொரு கடைகளிலும் பொருட்களை திருடி செல்வது போன்றும், திருடனை இளநீராக எண்ணி தேரி செம்மண்ணில் வைத்து வெட்டும் நிகழ்ச்சியும் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான கள்ளர் வெட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் 6 நாட்கள் கோவில் வளாகத்தில் உள்ள தேரிப்பகுதியில் குடில்கள் அமைத்து தங்கியிருந்து விழாவை சிறப்பாக கொண்டாடுகின்றனர். கள்ளர் வெட்டு திருவிழாவில் இளநீரை வெட்டும் இடத்தில் அந்த தண்ணீர் விழுந்த மண்ணை எடுத்து சென்று விவசாய நிலங்களில் தெளித்தால் விவசாய நிலம் செழிக்கும் என்றும், வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் விருத்தி ஆகும் என்பதும் ஐதீகம். அதனடிப்படையில் ஏராளமானோர் செம்மண்ணை மடிகளில் ஏந்தி வீடுகளுக்கு எடுத்து சென்றனர். திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in ஆன்மீகம்

To Top