கண்ணியக் குறைவை தலைமை ஒருபோதும் ஏற்காது – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை

கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்துவதைக் திமுக தலைமை ஒருபோதும் ஏற்காது என்று முக ஸ்டாலின் அறிக்கை.

திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக வீடியோ இணையத்தில் வைரலானதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்திருந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பரப்புரை செய்யும்போது மரபையும், மாண்பையும் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்றும் பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்க வேண்டியது கண்ணியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்துவதைக் கழக தலைமை ஒருபோதும் ஏற்காது என தெரிவித்துள்ளார். திமுகவினர் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல்வரை பற்றி தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. எனது பேச்சை வெட்டியும், ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இருவரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசியதை வெட்டி, ஒட்டி பரப்புகின்றனர். முதல்வரின் மாண்புக்கு சேதம் விளைவிக்கும் வகையில் எந்த கருத்தையும் கூறவில்லை என ஆ.ராசா விளக்கமளித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்