பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டும் விவகாரம் : ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தான் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் அனுப்பிய சுற்றறிக்கையில் ,சாதிகளை குறிக்கும் வகையில் பல பள்ளிகளில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதால் அனைத்து மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

 

ஆனால் இது  குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், காரைக்குடியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற அறிவிப்பை பள்ளி கல்வி துறை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பள்ளி மாணவர்களின் கைகளில் கயிறு அணிவதில் பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடைமுறை மாற்றத்தையும் கொண்டுவரவில்லை .ஏற்கெனவே இருக்கும் நடைமுறை  தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று தெரிவித்தார்.மேலும் இது தொடர்பான அறிக்கை தனது கவனத்திற்கும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.