அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இடையூறு அளித்து வரும் கேரள அரசை முதல்வர் தட்டிக்கேட்க வேண்டும். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்று கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்