எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : 10 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற சிறை கைதியை விடுவிக்க முடியாது!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மீது தொடரப்பட்ட கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து பழனிச்சாமியின் மனைவி தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்த தீர்ப்பில் பழனிசாமியை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுலா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா அவர்கள் ஆஜராகி பேசிய பொழுது, 10 ஆண்டு சிறை தண்டனை காலத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் எனவும், ஆனால் பழனிசாமி என்று மனுதாரர் ஒன்பது ஆண்டுகள் 24 நாட்கள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை விடுதலை செய்வதற்கு இன்னும் 349 நாட்கள் குறைவாக இருப்பதால் அவர் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
Rebekal