அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் – வானதி சீனிவாசன், எம்எல்ஏ

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும், அதேசமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற எஸ்.பி வேலுமணி மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக செயல்பட்டு வந்தது.

குறிப்பாக, திமுக தலைவரும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலுமணி மீது தனிப்பட்ட முறையிலேயே மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்கின்ற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பிரச்சாரத்தின்போது பேசி வந்தார்கள்.

அதற்குப் பின்பாக தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி கூட திமுக பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு எஸ்.பி.வேலுமணி தான் மிக முக்கிய காரணம் என இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக அவர் மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.

தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது இதை வைத்துக்கொண்டு, அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி என்கின்ற காரணத்தினால் அவரை மனரீதியான உறுதியை குலைப்பதற்காகவும் அவருக்கு தொடர்பு உடைய இருக்கிறவர்களின் இடங்களை எல்லாம் சோதனை செய்வதின் வாயிலாக அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.

இம்மாதிரி அரசியல் எதிரிகளை பழிவாங்கும் இந்த நடவடிக்கையை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டுமென என்றும் அரசியலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்