அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு!

அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க AICTE என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி கையேட்டை ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில், சராசரியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையைக் கொண்ட பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான அனுமதி இடங்கள் பாதியாக குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ர புத்தே தெரிவித்துள்ளார்.

மாணவர்சேர்க்கை அறவே இல்லாத பாடப்பிரிவுகள் முற்றிலும் நீக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், மாநில அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட்டிருந்தால் மட்டுமே, புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 291 பொறியியல் கல்லூரிகளில் 51 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததை டுத்து, ஏஐசிடிஇ இந்த முடிவை எடுத்துள்ளது. பொறியியல் படிப்புகளின் தரம் குறைந்து வருவதுடன், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்காத சூழல் நிலவி வருவதை அடுத்து, தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஏஐசிடிஇ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Leave a Comment