2024 தேர்தல் : வெற்றி வாய்ப்பு இருந்தால் எம்.பி சீட்.! இபிஎஸ் திட்டவட்டம்.!

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கூறினார்.

அதிமுகவின் நம்பிக்கை துரோகி ஓபிஎஸ் – ஜெயக்குமார்

யாருக்கு வாய்ப்பு :

அடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசுகையில்,  அதிமுக வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எல்லா வகையிலும் தயாராகி வருகிறது. வேட்பாளர்களை நாங்கள் இன்னும் தேர்வுசெய்யவில்லை.  யாருக்கெல்லாம் போட்டியிட விருப்பம் இருக்கிறதோ அவர்கள் கட்சி தலைமை அறிவித்த பின்னர் முறைப்படி தேர்தல் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்னர் மூத்த தலைவர்கள் கலந்து ஆலோசித்து, யாருக்கு அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் :

ராமர் கோயில் கும்பாபிஷேகம் பற்றிய கேள்விக்கு, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அதிமுக கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதிமுக கட்சி சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது. எனக்கு உடல்நிலை தற்போது சரியில்லை. வாய்ப்பு இருந்தால் நானும் கலந்துகொள்வேன் எனவும் இபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்வர் மீது விமர்சனம் :

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாண்டு சீராய்வு செய்யவில்லை. வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது என பொய்யாக அமைச்சர்கள் கூறினார்கள். தென் மாவட்டத்தில் மழை வெள்ள சமயத்தில் கூட இந்தியா கூட்டணி ஆலோசனையில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். மக்களை விட ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என அவர் நினைக்கிறார் என்றும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் இபிஎஸ்.

அதிமுக கூட்டணி :

விரைவில், அதிமுக தலைமையில் மக்களவை தேர்தலுக்கு நல்ல கூட்டணி அமையும். தேர்தல்  அறிவித்த பிறகு நானே கூறுவேன் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.