சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டம்…!!

சேதுசமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்றும், மாற்று பாதையில் இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தையும் ஸ்ரீலங்கா இணைக்கும் ஒரு மணல் திட்டான ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அப்போது மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் அவ்வரசு சேது சமுத்திர திட்டத்தை அப்பகுதியில் அமல்படுத்த 2013ம் ஆண்டு திட்டமிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் தனி நபராக முன்வந்து ஒரு வழக்கை தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், ராமர் பாலம் இந்து மதத்தின் அடையாளங்களின் ஒன்றாக இருப்பதால், அதை சேதப்படுத்துவது மதரிதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு , அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், ”சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. அது ஒரு தனிப்பட்ட மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை கொண்டதாக உள்ளது. அதை அகற்றினாலோ அல்லது சேதப்படுத்தினாலோ மத ரீதியிலான சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் அத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தவே மத்திய அரசு எண்ணுகிறது” என்று விளக்கம் அளித்தார். மேலும், மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள காரணத்தால், வழக்கை தள்ளுபடி செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment