18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?நீதிபதி கிருபாகரன் கேள்வி

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று  நீதிபதி கிருபாகரன் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கு விவரம்:

அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக முதலமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் 19 பேருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. இதனிடையே ஆளுநரிடம் மனு கொடுத்தவர்களின் ஒருவரான ஜக்கையன், தனது நிலையை மாற்றிக் கொண்ட நிலையில் எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென கோரி, அதிமுக கொறடா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் பேரில் 18 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து, 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம். துரைசாமி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் வெளியிடக்கூடாது.

அதேபோல மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் நீதிபதி கே. ரவிசந்திரபாபு வழக்கை விசாரிக்க தொடங்கினர்.

ஆனால் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நீதிபதி கே.ரவிசந்திரபாபு வழக்கின் முக்கியத்துவத்தை கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார். இதன் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 – ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் 18 எம்.எல்.ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் வழக்கை முதல் அமர்வே விசாரிக்கும் என அறிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 தேதி – ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரணை தொடங்கியது.

கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. ஜனவரி மாதம் 23 – ஆம் தேதி அன்று அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டது.பின்னர் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment