முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் தூத்துக்குடியில்

இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமை வகித்துப் பேசினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், அவைத் தலைவர் வெங்கடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்டச் செயலர் துரை, மாநிலத் துணைத் தலைவர் நம்பிராஜன், மாவட்டத் துணைத் தலைவர் சாமியா, மகளிரணியைச் சேர்ந்த பாப்பா மற்றும் சங்க உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மாரியப்பன் உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், 2015-16ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை தற்போது வரை முறையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக, பயிர்க் காப்பீட்டுக்கான இன்சூரன்ஸ் தொகையை செலுத்திய கடம்பூர், கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, இளையரசனேந்தல், எட்டயபுரம் உள்ளிட்ட குறுவட்டப் பகுதி விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை போராடியும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தற்போது 2015-16ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.29.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது.
இந்த முறைகேடு குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வரும் முதல்வருக்கு விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment