மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு உயர்நீதிமன்ற கிளையில் 5 நிபந்தனை விதிப்பு!

உயர்நீதிமன்ற கிளையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான 5 நிபந்தனைகளை  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் அறிவிக்கப்படாததால், மத்திய சுகாதாரச் செயலாளர் மீது கே.கே.ரமேஷ் என்பவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது மத்திய அரசு சார்பில், ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக தெரிவித்தார். மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள 5 நிபந்தனைகளையும், நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார்.

அதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், மருத்துவமனைக்காக தரப்படும் நிலத்தில் ஆக்கிரமிப்போ, எவ்வித பிரச்சனைகளோ இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 20 மெகாவாட் மின்சாரம் மற்றும் தடையில்லா தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், அப்பகுதியில் மின்சாரக் கம்பிகள் தாழ்வாக சென்றால் அதை அகற்றி, வேறுவழியில் மாற்றிவிடவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய்கள் செல்வதால், அந்நிறுவனத்திடம் இருந்து தடையில்லா அனுமதிச் சான்று பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  மத்திய சுகாதாரச் செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment