மதுரையில் காலா டிக்கெட் தகராறில் வினியோகஸ்தரை கடத்திச் சென்ற 5 பேர் கைது!

காலா திரைப்பட டிக்கெட் விற்பனையில் மதுரையில்  ஏற்பட்ட தகராறில், வினியோகஸ்தரை கடத்திச் சென்றதாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 சாக்குமூட்டைகளில் போலி ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காலா திரைப்படத்தில் மதுரை வினியோகஸ்தரான எஸ்.கே. பிலிம்ஸ் செல்வராஜ் என்பவரை, மதுரை பிபீ குளத்தைச் சேர்ந்த அஜித், விக்னேஷ் ஆகியோர், இரு  தினங்களுக்கு முன் அணுகியுள்ளனர்.

திரைப்படம் வெளியாகும் தினத்தில், தங்கரீகல் திரையரங்கில் முதல் காட்சிக்கான 500 டிக்கெட்டுகளை, 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் விற்காததால், நேற்றிரவு செல்வராஜை சந்தித்து, டிக்கெட்டை பெற்றுக் கொண்டு, பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். இதில் முடிவு எட்டப்படாததால், அஜித், விக்ணேஷ் உள்ளிட்ட 5 பேர், செல்வராஜை ஸ்கோடா காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து செல்வராஜின் நண்பர், திரையரங்க பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரிடம் தகவல் அளித்தார். அதன்பேரில் ரோந்துப்பணியிலிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டு, அவுட்போஸ்ட் என்ற இடத்தில் அதிவேகமாக வந்த ஸ்கோடா காரை தடுத்து நிறுத்திய போலீசார், செல்வராஜை மீட்டனர். அஜித், விக்ணேஷ் உள்ளிட்ட 5 பேர், தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

செல்வராஜின் புகாரின்பேரில் ஐவரும் கைது செய்யப்பட்டனர். ஸ்கோடா காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின்பேரில், மாட்டுத்தாவணி அருகே அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சோதனையிட்ட போலீசார், 2 சாக்குமூட்டைகளில் இருந்த ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். கடத்தல் குறித்தும், போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment