தூத்துக்குடியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு..!!

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு காண மருத்துவமனைக்கு  ஆய்வுக்கு சென்றபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பி வருவதையடுத்து, கடந்த 21ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, போராட்டத்தின்போது சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது;  ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜெயலலிதா ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க  பணிக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. ஏப். 9-ல் ஸ்டெர்லைட் ஆலை லைசன்ஸ் புதுப்பிக்க படவில்லை. ஏப்.9ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இயங்காத ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அரசு விளக்கியது. போராட்டம் நடத்திய மக்களுக்கு 98 நாட்களாக தமிழக அரசு பாதுகாப்பு அளித்தது.  மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது. வன்முறை ஏற்பட்டதால் தடியடி நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வன்முறையில் 98 வாகனங்கள் முழுமையாக எரிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பியது என தெரிவித்தார் மேலும் அவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை காண மருத்துவமனைக்கு  ஆய்வுக்கு சென்றபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment