எனக்கு இந்தி தெரியாது! கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டுவிட் செய்யுங்கள் ! பாஜக -காங்கிரஸ் கருத்து யுத்தம்!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா,உங்களுக்கு கன்னடத்தில் டுவிட் செய்ய கற்றுக் கொடுத்தது எனக்கு சந்தோஷமே என்று பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ்-க்கு நெத்தியடிபதில் கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மே 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தொடர்ந்து அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜகவும் ஈடுபட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தராமையா முன்னதாக சாமுண்டீஸ்வரிதொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். கூடுதலாக பாதாமி தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளைமறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுவதை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் தனது டுவிட்டர்பக்கத்தில், சித்தராமையா ஜி, தீவிர ஆலோசனைக்குப் பின் மைசூர், சாமுண்டீஸ்வரி தொகுதியை நீங்கள் தேர்வு செய்தீர்கள். தற்போது, அத்தொகுதியில் நின்றால்வெற்றி பெற முடியாது என்று எண்ணி, பயத்தில் மற்றொரு தொகுதியிலும் போட்டியிட்ட திட்டமிட்டிருக்கிறீர்கள். உங்கள் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன்;இரண்டு தொகுதியில் மட்டுமல்ல… கர்நாடக முழுவதும் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

முரளிதர ராவ் டுவிட்டர் பதிவுக்கு சித்தராமையா, எனக்கு இந்தி புரியவில்லை; கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் டுவிட் செய்யுங்கள் என்று பாஜகவின் இந்திமொழி திணிப்பை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார். இதனை அடுத்து முரளிதரராவ், இந்தியில் டுவிட் செய்ததை கன்னடத்தில் எழுதி இருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்தராமையா, என்னுடைய விதியை இரண்டு தொகுதியிலும் உள்ள மக்கள் முடிவு செய்வார்கள். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படவேண்டாம். ஆனால் உங்களுக்கு கன்னடத்தில் டுவிட் செய்ய கற்றுக் கொடுத்த வரை எனக்கு சந்தோஷம்தான் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment