கேரள அரசு செய்ததை தமிழக அரசும் செய்ய வேண்டும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  • குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.
  • தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் குடியுரிமை  திருத்த சட்டதிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு  வர முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இன்று குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார் பினராயி விஜயன்.இதற்கு ஆதரவாக 138 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது .அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை அனைத்து மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் .மேலும் இதனை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.