பிரதமர் மோடி நேரடியாக  5 பேரிடம் விவாதிக்க வேண்டும்- சிதம்பரம் கோரிக்கை

  • குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
  • அவரது பதிவில், பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை  திருத்த  சட்டம் குறித்து நேரடியாக  5 விமர்சகர்களிடம் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ )என்பது குரியுரிமை கொடுப்பதே தவிர, குடியுரிமையை  பறிப்பது அல்ல என்று பிரதமர் கருத்து தெரிவித்து வருகிறார்.தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உடன் தொடர்புடையதாக கருதப்படும்  குடியுரிமை திருத்த சட்டம், ஏராளமானோரை குடியுரிமை அற்றவற்றவர்கள் ஆக்கும் என்றும்  குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறித்துவிடும்  என்றும் என்னைப்போன்ற பலரும் நம்புகின்றனர்.

கேள்விகள் கேட்க முடியாத அமைதியான மக்களிடம் உயர்தளங்களில் இருந்து மட்டுமே மோடி பேசுகிறார். நாங்கள் மீடியாக்கள் வாயிலாக பேசுகிறோம்.செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறோம்.ஆனால் விமர்சகர்களுடன் மோடி பேசுவதில்லை. மோடியுடன் பேச விமர்சகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

எனவே பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை  திருத்த  சட்டம் குறித்து நேரடியாக  5 விமர்சகர்களிடம் விவாதிக்க வேண்டும்.டி.வி. விவாதத்தில் பிரதமர் பேசுவதை கேட்டு குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மக்களே முடிவெடுப்பார்கள். எனது பரிந்துரையை  பிரதமர் மோடி ஏற்பார் என்று நம்புகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.