சிதம்பரம் ஓடி ஒழிய வேண்டிய அவசியம் இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

சிதம்பரம்  ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று  இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு  நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை.  முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்  உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் வழக்கில் நீதிமன்றமே தன்னுடைய கருத்தை  தெளிவாக தெரிவித்துள்ளது.அதாவது வழக்கின் மூளையாக சிதம்பரம் செயல்பட்டு உள்ளார் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது.  ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீனை மறுத்த பின்பே சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே அவர் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.