சிபிஐக்கு மெகுல் சோக்ஸி கடிதம் !இந்தியாவுக்கு வருவது சாத்தியமில்லை….

சிபிஐக்கு எழுதிய கடிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்புடைய மெகுல் சோக்ஸி உடல் நிலை காரணமாக இந்தியா திரும்ப முடியாது என  கூறியிருக்கிறார். மார்ச் 7-ம் தேதி சிபிஐ-க்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 7-ம் தேதிக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என சிபிஐ கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பாக ஏழு பக்கங்களில் மெகுல் சோக்ஸி கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: என்னுடைய உடல் நலம் சரியில்லை, தவிரவும் என்னுடைய பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டதால் தற்போது இந்தியாவுக்கு வர முடியாது. பாஸ்போர்டை புதுப்பிக்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். ஆனால் அந்த கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என்று என்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையில் பாதுகாப்புக்கு பிரச்சினை என்னும் என் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அடுத்து என்னுடைய உடல் நலனில் எனக்கு அக்கறை இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் பட்சத்தில் கைது செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி கைது செய்யும்பட்சத்தில் என்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப மருத்துவரை அணுக முடியாது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருக்கும். ஏற்கெனவே உடலில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாக அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு என்னால் பயணம் மேற்கொள்ள இயலாது. என்னுடைய இதயத்தில் பிரச்சினைகள் இருக்கின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த பிரச்சினை உருவானது. இதற்கான சிகிச்சைகள் முடிவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும்.

ஊடகங்களும் புலனாய்வு அமைப்புகளும் முன்முடிவுகளோடு என்னை அணுகுகின்றன. வழக்கின் ஒவ்வொரு விஷயமும் ஊடகங்களில் ஊதிப்பெருக்கப்பட்டு வருகிறது. சிபிஐ என்னுடைய அலுவலகங்கள் மற்றும் சர்வரை முடக்கி இருக்கிறது. என்னுடைய தொழில் சம்பந்தமான எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை. குற்றச்சாட்டுகளில் இருந்து என்னை தற்காத்துக்கொள்ளும் அடிப்படை உரிமை கூட எனக்கு வழங்கப்படவில்லை. என்னுடைய அலுவலகங்களில் இருக்கும் ஆவணங்களை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தவிர என்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

அதனால் இந்தியாவுக்கு வெளியே இருந்து என்னுடைய பணிகளை கவனித்து வருகிறேன். விசாரணை தொடர்பாக என்னுடைய யாகூ மெயில் அல்லது என்னுடைய வழக்கறிஞரிடம் தொடர்பு கொள்ளலாம் என மெகுல் சோக்ஸி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment