“இந்தியாவில் நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..!

இந்தியாவில் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம்,இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,நோபல் பரிசு அக்.11 ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.

அதன்படி,நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதனையடுத்து,நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த சியுகுரோ மனாபே,ஜெர்மனை சேர்ந்த கிளாஸ் ஹாசெல்மேன்,மற்றும் இத்தாலியை சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலுள்ள தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை கணித்தல் ஆகியவற்றிற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்தியாவில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். இந்தியாவில் 23 ஐஐடிகள், ஓர் ஐ.ஐ.எஸ்.சி, நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?”,என்று பதிவிட்டுள்ளார்.