“உக்ரைன் கதி என்ன? ..இன்று தெரிந்து விடும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி !

உக்ரைனின் கதி என்ன ஆகும் என்பது இன்று தெரிந்து விடும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது நேற்று முன்தினம் முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.சுமார் 40 நிமிடங்கள் இப்பேச்சுவார்த்தை நீடித்ததாக தெரிகிறது.அப்போது ரஷ்யா மீதான தடைகளை வலுப்படுத்துதல்,போதிய ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,உக்ரைன் தலைநகர் கீவை நோக்கி முன்னேறி வரும்  ரஷ்ய படைகள் அதனைக் கைப்பற்றுவதற்காக இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக கூறினார்.மேலும், உக்ரைனின் கதி என்ன ஆகும் என்பது இன்று தெரிந்து விடும். எனினும், இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி” எனவும் கூறியிருந்தார்.

அதன்படி,உக்ரைன் தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 3 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதன்காரணமாக,உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,உக்ரைனுக்கு உதவ  கூடுதலாக பாதுகாப்பு உதவிகள் தரப்படும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.