உலக சாதனையை முறியடித்த விராட்… பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி மோதி வருகிறது.

இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும், ரோஹித் ஷர்மா 47 ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் எடுத்தனர். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 106 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி தனது 50-ஆவது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50-ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். நடப்பாண்டு உலகக்கோப்பையில் விராட் கோலி தனது மூன்றாவது சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில், தனது சாதனையை முறியடித்த விராட் கோலிக்கு சச்சின் பாராட்டி உள்ளார். இதுகுறித்து சச்சின் தனது எக்ஸ் ட்விட்டரில் பதிவிட்ட பதிவில் “ட்ரெஸ்ஸிங் ரூமில் உங்களை முதன் முதலில் நான் சந்தித்தபோது சக வீரர்கள் என் கால்களை தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில் உங்கள் ஆர்வத்தாலும், திறமையாலும் என் இதயத்தை தொட்டீர்கள்.

அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய  வேறு ஏதும் இல்லை. அதுவும் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டி என்ற மிகப்பெரிய அரங்கிலும், எனது சொந்த மைதானத்தில் அதனை செய்திருப்பது அழகிற்கு அழகு  சேர்ப்பதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan