பிரதமருக்குத்தானே ,டேக் பண்ணிட்டா போச்சு – கமல்ஹாசன் பதில்

ட்விட்டில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்யவில்லை என்று கேள்வி எழுந்த நிலையில் ,கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் கட்டிடம் போதுமான வசதி மற்றும் வரும் காலங்களில் இடங்கள் அதிகரிப்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில்  ரூ.971 கோடி செலவில் புதிய கட்டிடம் தேவையா என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவர் பதிவிட்ட பதிவில், சீனப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று கேள்வி எழுப்பினார்.ஆனால் இவரது ட்விட்டில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்யவில்லை என்று கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்க உள்ளார்.இதன் காரணமாக மதுரை சென்ற கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ,பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று காலை பதிவிட்ட ட்விட்டில் பிரதமருக்கு ஏன் டேக் செய்யவில்லை என்ற விவாதம் எழுந்து வருவதாக கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ,டேக் பண்ணிடலாம்.மறுபடியும் டேக் பண்ணிட்டா போச்சு என்று தெரிவித்துள்ளார்.