#BREAKING : ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அண்மையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவின்  ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம்.பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் – பிஜேபியில் இணையவில்லை.தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.

இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட  கு.க.செல்வம் ,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் ,மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இதனிடையே  திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில் அளித்தார்.அவரது பதில் கடிதத்தில், கட்சி மாண்பை மீறவில்லை .மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை .கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே  என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை   திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.