பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இங்கு இல்லை.. இபிஎஸ் கடும் விமர்சனம்.!

Election2024 : தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக கட்சிக்கு பாஜக, அதிமுக என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிமுக தரப்பில் 7 தொகுதிகள் ஒதுக்கவும், பாஜக தரப்பில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இறுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்தது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அண்மையில் பாமக வெளியிட்டது. ஒரு தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக கூட்டணி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில், பாமக இதுவரை தமிழகத்தில் கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என விமர்சித்தார்.

மேலும், முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் அளித்தார். ஆனால், தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை. கூட்டணிக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். இல்லை என்றால் நாங்கள் தனித்து நிற்போம். அதிமுக வென்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என இபிஎஸ் தனது கருத்தை தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் தான். திமுகவில் ஆட்சி செய்த கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் கடுமையான ஊழல் நடைபெற்று உள்ளது என்றும் ஆளும் மாநில அரசை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.