“தகைசால் தமிழர் தோழர் சங்கரய்யா விரைவில் குணமடைய வேண்டும்” – முதல்வர் ஸ்டாலின்!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதனையடுத்து,அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனைத் தொடர்ந்து,சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட விழைகிறேன்.

தோழர் அவர்களைக் கவனித்துக் கொள்ளத் தனி மருத்துவக் குழுவையும் ஏற்பாடு செய்து உத்தரவிட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,சங்கரய்யா அவர்கள் நலமுடன் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்து,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார். அவருக்கு ஆக்ஸிஜன் லெவல் மற்ற அனைத்தும் வழக்கம் போலவே உள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

அவரை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்புகொண்டு தெரிவித்தார்.என்.சங்கரய்யா உடல் நலம் குறித்தும் கேட்டு அறிந்தார்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று,தகைசால்தமிழர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார்.பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு மேடையிலேயே முதல்வரிடம் என்.சங்கரய்யா அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.