மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா இப்படி செஞ்சி பாருங்க..!

மாலைநேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி–1 கப், பாசிப்பருப்பு–1/4 கப், உளுத்தம் பருப்பு-1/4 கப், கடலைப்பருப்பு–1/4 கப், பூண்டு-7 பற்கள், இஞ்சி–2 இன்ச், பச்சை மிளகாய்–3, மஞ்சள் தூள்–1/4 டீஸ்பூன், சீரகம்–1/2 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை–1 கைப்பிடி, சமையல் எண்ணெய்-தேவையான அளவு.

செய்முறை: முதலில் பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி பின்னர் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்து ஊறிய பச்சரிசி மற்றும் பருப்பு வகைகளை மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ளவும். இதனுடன் தோல் உரித்த பூண்டு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம், இட்லி மாவு பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

அரைத்த பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு அதில் மஞ்சள்தூள், சீரகம், தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் செய்து வைத்துள்ள மாவை போண்டா போல் உருட்டி அதில் சேர்க்க வேண்டும். நன்கு பொன்னிறம் வந்ததும் அதனை எடுக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடக்கூடிய பருப்பு போண்டா ரெடி.