3 கோடி நிதியுதவி அளித்த அமெரிக்க வாழ் தமிழர்கள் – முதல்வர் முக ஸ்டாலின் நன்றி!

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்காக அமெரிக்கா வாழ் தமிழர்கள் தற்பொழுது 3 கோடி நிதியுதவி அளித்துள்ளதால், தமிழ் போல் வாழ்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து திரை உலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் வாழக்கூடிய தமிழ் மக்கள் இணைந்து கொரோனா பணிகளுக்காக தற்பொழுது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி நிதியாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே இவர்கள் 20 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காணொலி வாயிலாக முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் இது குறித்து பேசியுள்ளார்.

அதில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் உரிமையை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து சில நண்பர்கள் தமிழகத்திற்கு வந்து திமுகவிற்காக  தேர்தல் பரப்புரை செய்ததையும் தான் அறிவேன் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அமெரிக்க வாழ் தமிழர்கள் 20 கோடி மதிப்பில் நிவாரண உதவி செய்ததாகவும், தற்பொழுதும் சுமார் 3 கோடி ரூபாய் நிதியை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் வழங்கிய உள்ளதாகவும், இதில் பல லட்சம் குடும்பங்களின் வாழ்வு தெரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் நிதி மக்களை வாழவைக்கும் எனவும், கொரோனாவை குணப்படுத்துவது மருந்து மட்டுமல்ல பிறர் கொடுக்கும் ஆறுதலும் தான். அத்தகைய நம்பிக்கை விதையை நீங்கள் விதைத்து உள்ளீர்கள். காலத்தால் செய்த நன்றி என்று வள்ளுவர் சொல்வது போல நீங்கள் நன்றியை காட்டி இருக்கிறீர்கள். உங்கள் நிதி பலகோடி மக்களை வாழவைக்கும், உங்கள் நிதி உயிர் கொடுக்கும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் தமிழ்நாட்டு மக்களை மறக்க மாட்டீர்கள் என்று காட்டி இருப்பதாகவும், நாங்களும் உங்களை மறக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த தமிழ்குடி மக்கள், புலம்பெயர்ந்து சென்று இருந்தாலும் நாம் இணைப்பதும் பிழைப்பதும் தாய் மொழியாம் தமிழ் மொழி தான் எனவும், அந்த தமிழ்மொழி போல நீங்கள் பல்லாண்டு வாழ்க என உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், நன்றி வணக்கம் என உரையாற்றியுள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal