காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கைவிட வேண்டும்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில்  144 தடை உத்தரவு பிறப்பித்தது.மேலும் அங்கு தொலைபேசி மற்றும் இணைய சேவையையும் ரத்து செய்தது மத்திய அரசு.குறிப்பாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வந்தாலும் ,ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,மெஹபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்னும் வீட்டுக்காவலிலே உள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான “பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்” கீழ் கைது செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, காஷ்மீரத்து சிங்கம் பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது, அடிப்படை உரிமைகளின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் செலுத்தப்படும் கொடூரமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகக் கதவுகளைத் திறந்து விட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடமளிப்பதுடன், புதிய புதிய காரணங்களைக் கண்டு பிடித்து காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கைவிட வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.