முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பிரிவு உபசாரவிழா…!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெறும் திரிபாதி அவர்களுக்கு, பிரிவு உபசார விழா  நடைபெற்றது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிபாதி அவர்கள், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1985-ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றி காவல்துறை சட்டம் ஒழுங்கு பணிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னைக்கு மாற்றப்பட்ட இவர் தென் சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய இவர், ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றார். பின் இவர்  சென்னை மாநகர காவல் ஆணையராக இரண்டு முறை பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து, சிறைத்துறை ஏடிஜிபியாகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்ட ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்ற இவர் கடந்த 2 ஆண்டுகளாக டிஜிபி-யாக பணிபுரிந்து இன்றுடன் ஒய்வு பெற்றுள்ளார்.

 இன்று காலை, டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமரவைத்து, காவல்துறை அதிகாரிகள், காரை தேர் போல கயிறு கட்டி இழுத்து, காருக்கு முன்பாக மலர்களைத் தூவி, பாரம்பரிய முறைப்படி காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெறும் திரிபாதி அவர்களுக்கு, பிரிவு உபசார விழா  நடைபெற்றது. இந்த விழாவில், தற்போது டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் மற்றும் திரிபாதி அவர்கள் தனது குடும்பத்தோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.