கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து வினியோகம்!

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் தான் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து நோய்த்தொற்று குறைவாக இருப்பவர்கள் ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்தும், அதிக நோயின் தாக்கம் கொண்டவர்களுக்கு நான்கு குப்பி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட வேண்டும் என கூறப்படுகிறது. இந்த மருந்துகளை வாங்கி வருவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர்  மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு மருந்துகளை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்கனவே மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினாலும், மருந்து வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் கூட்டத்துடன் மோதி அடித்து கொண்டு மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது மக்கள் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தற்போது கீழ்ப்பாக்கத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இது குறித்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு எடுத்து வரக் கூடிய நடவடிக்கை திருப்தி அளிக்கும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal