பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜிஎஸ்டி வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு – அமைச்சர்

வரி விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என அமைச்சர் தகவல்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. மாநில, மத்திய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது. பேரறிவாளன் விடுதலையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜிஎஸ்டி வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.

தமிழக அமைச்சரவையோ, சட்டமன்றமோ இயற்றும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மாநிலங்களின் உரிமைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட முடியாது. தனது செயல்பாட்டின் மூலம் நாட்டின் திசையையே திருப்பி இருக்கிறது முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. கூட்டாட்சி தத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது முக ஸ்டாலின் அரசு. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேர்தல் பத்திரங்கள் எந்த அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் எனவும் விளக்கமளித்தார்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கும் பரிந்துரையை மாநில சட்டமாக்கினால் தான் அமலுக்கு வரும். ஜிஎஸ்டி பரிந்துரையை மாநிலங்ககள் ஏற்கவில்லை என்றால் செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது. விருப்பப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை ஏற்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். தற்போது வந்துள்ள தீர்ப்பு மாநில உரிமைக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கு மற்றும் முதலமைச்சரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி ஆகும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here