இணைகின்றார்களா ரஜினி – கமல்? ஒரேமாதிரியான கருத்தை தெரிவித்ததால் சூடு பிடித்த அரசியல் களம்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் திரை உலகின் சிறந்த நண்பர்கள் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி மக்களவை தேர்தலில் கட்சி போட்டியிட்டது.ரஜினியும் தனது அரசியல் கட்சியை தொடங்கும் பணியை வேகப்படுத்தியுள்ளார்.ஆனால் பொதுவான கருத்துக்களை தெரிவிக்கும்போது ஒருசில நேரம் இருவரின் கருத்துக்களும் ஒற்றுப்போகும்,இல்லையேல் இருவரும் மாறி மாறி கருத்து தெரிவிப்பார்கள்.இது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அரசியல் கருத்துக்களை பொருத்தவரை இருவரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது இருவரும் ஒரே கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இதற்கு முதல் காரணமாக அமைந்தது கமல்ஹாசனின் 60-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ .சந்திர சேகர் பேசுகையில் , கமலுடன் ரஜினி இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது என்று தெரிவித்தார்.
இதேபோல் ரஜினியும் பங்கேற்றது மட்டும் அல்லாமல் அரசியல் குறித்து பேசினார்.அவர் பேசுகையில்,தமிழகத்தின் முதல்வராகுவேன் என்று பழனிசாமி கனவில் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.ஆனால் அந்த அதிசயம் நடந்தது.அதிசயம் நேற்றும் நடந்தது,நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கு அதிமுகவினர் ரஜினியை தொடர்ச்சியாக விமர்சனம் செய்தனர்.இந்த விவகாரம் சூட்டை கிளப்பிய நிலையில் தான் கமல் ஹாசனும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அப்போது கமல்ஹாசன் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுவிட்டு சென்னைக்கு வந்தார்.அந்த சமயத்தில் சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள்  ரஜினி குறித்து கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு கமல் ,ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்.நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்று தெரிவித்தார்.
கமல் இவ்வாறு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரம் கழித்து நடிகர் ரஜினிகாந்த் கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.அப்பொழுது அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு ரஜினி கூறுகையில்,மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்று  கூறினார்.
இரண்டு ஜாம்பவான்களும் சிறிது நேரத்திற்குள் இருவரும் அரசியலில் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியது.இருவரின் இந்த இணைப்பு பேச்சு குறித்து பல்வேரு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.விமர்சனமும் செய்து வருகின்றனர். ஆனால் இருவரும் அவசியம் ஏற்பட்டால் இணைவார்களா? இல்லையா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.