ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். 

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ் குமார் அவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிக மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதனை அடுத்து இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளது.

இதில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகள் வசதிபடைத்த பலர் பெற்றிருப்பதுடன், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாத பலருக்கு வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே போல பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக தரமான அரிசி வழங்குவதற்கு தமிழக அரசு உறுதி ஏற்று உள்ளதாகவும், இதற்காக ரேஷன் கடைகளில் அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் கலர் ஷேடிங் எனும் அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

author avatar
Rebekal