ராமநாதபுரம் தொகுதியில் இரண்டு ஓபிஎஸ் போட்டி.? குழப்பத்தில் ஆதரவாளர்கள்…

Election2024 : ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று ராமநாதபுரம் தேர்தல் அலுவரிடத்தில் தாக்கல் செய்தார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அவருக்கான சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயப்பெருமாள் என்பவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த கடந்த முறை வெற்றி பெற்ற நவாஸ் கே.கனி போட்டியிடுகிறார்.

ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக களம் இறங்குவது போல, மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்றவரும் ஓ.பன்னீரசெல்வம் எனும் பெயரில் சுயேட்சையாக களம் காண்கிறார். இதனால், வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதே போல் மேலும் ஒரு ஓபிஎஸ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இப்படி ஓபிஎஸ் பெயரின் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குவது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் என்ன செய்வது என்று அறியாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.