மாதம் 66ஆயிரம் வாங்குகிறவர் ஏழையா.? அனைத்து கட்சி கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்.!

வருடம் 8 லட்சம் என்றால் மாதம் 66 ஆயிரம் வாங்குறவர் ஏழையா? இதுதான் உண்மையான சமூகநீதியா.? – 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்.

10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுக்கு எதிராக இன்று திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக , பாஜக ஆகிய கட்சிகள் தவிர பிரதான 10 கட்சிகள் கலந்துகொண்டன.

இந்த கூட்டம் முடிந்து, திமுக அமைச்சர் பொன்முடி, மதிமுக தலைவர் வைகோ உட்பட பிரதான கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து இந்த கூட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘ சமூக நீதியை காப்பாற்ற நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 10 கட்சிகள் பங்கேற்றன. சமூகநீதிக்கு எதிரான 10 சதவீத இட ஒதுக்கீட்டு எதிராக மீண்டும் நீதிமன்றம் செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் மறுசீராய்வு மனு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு உறுதுணையாக செயல்படும். எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘ இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக சட்டத்துறையும் துணை இருக்கும். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. சமூகநீதி கொள்கையை எம்ஜி ஆர், ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சட்டம் வந்த போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை வெளிநடப்பு செய்தார். அதிமுகவை சேர்ந்த நவனீதகிருஷ்ணனும் வெளியேறினார். ஆனால், இப்பொது அதிமுக கலந்துகொள்ளவில்லை. ஒருவேளை அதிமுக தனது சமூகநீதி கொள்கையை விடுத்து பாஜக கொள்கையின் படி செயல்படுகிறதோ என சந்தேகம் எழுகிறது. எனவும் குற்றம் சாட்டினர்.

கடந்த 2019ஆம் ஆண்டு 10 நாட்களில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மாநிலங்களைவை கூட்டம் முடிந்த பிறகு அவசரமாக அவை கூட்டி நிறைவேற்றப்பட்டு, உடனடியாக ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்கி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. வருடம் 8 லட்சம் என்றால் மாதம் 66 ஆயிரம் வாங்குறவர் ஏழையா? இதுதான் உண்மையான சமூகநீதியா.? இதனை தமிழகம் முழுமையாக எதிர்க்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment