சொகுசு கார் விவகாரம்: அபராதம், விமர்சனங்களை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்த நடிகர் விஜய்!!

சொகுசு கார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு.

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம். எனவே, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. பின்னர் சொகுசு கார் தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில், வாகன நுழைவு வரியில் மீதமுள்ள தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜயின் மேல்முறையீடு வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்