டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடி வர வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடி வர வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதை நினைக்கும் போது உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை இருக்கிறதோ அதே அளவு எனக்கும் பெருமையாக இருக்கிறது.

நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களுடன் தான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. மக்களுடைய நம்பிக்கையும் அதுதான். உங்களில் பலர் வறுமையான சூழலில் வாழ்க்கையை கடந்து வந்தாலும், விளையாட்டுப்போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும் உங்கள் திறமை மீது நீங்கள் வைத்த நம்பிக்கையும் தான், உங்களை இந்த அளவுக்கு அழைத்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இனிமேல் உங்களுக்கு பொருளாதார தடைகள் இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும். விளையாட்டில் திறமை உள்ளவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும், ஆண் வீரர்களை பொறுத்தவரையில் பொருளாதாரத்தடை மட்டும்தான் காணப்படும், ஆனால் பெண் வீராங்கனைகளை பொறுத்தவரையில் பொருளாதாரத்தடையோடு சேர்ந்து குடும்ப தடைகள், சமுதாய தடைகள் அதிகமாக காணப்படும். இந்த தடைகளை எல்லாம் தாண்டி தான் ஒலிம்பிக் போட்டியில் பயிற்சி பெற நீங்கள் வந்துள்ளீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் திறமையை அரசு மதிக்கிறது. மேலும் உங்களுக்கு பயிற்சி  கொடுத்த  பயிற்சியாளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இன்னும் ஏராளமானோர் கலந்து கொள்ளும் வகையில் அரசு சூழலை ஏற்படுத்தி தரும் என்று உறுதி அளிப்பதாகவும், உங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருப்பின் எங்களிடம் கூறலாம், தேவைகளை பூர்த்தி செய்து தர தயாராக இருக்கிறோம் என்றும், அனைவரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை பெற்று வர வாழ்த்துவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வாழ்த்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.