ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார் – ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமையில் நடைபெறும் முதல் போராட்டம் என்பதால், இதுதொடர்பாக சென்னை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சென்னை மாநகரம் இதுவரை பார்த்திடாத அளவுக்கு இந்த போராட்டம் நடைபெறும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் நேரம் கேட்டு ஒதுக்கப்படவில்லை என கூறுவது தவறானது. பிரதமர் சென்னை வரும்போது அதிமுக சார்பில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்துப் பேசுவார் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஊர்தோறும் சிலை வைப்பதற்கு, நினைவுச் சின்னம் அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணமில்லை என்கிறது திமுக. விளம்பரம் மற்றும் கருணாநிதி புகழுக்காக மட்டுமே கோடி கோடியாக செலவு செய்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? என்றும் கேர்ள்வி எழுப்பினார். மேலும், ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்றும் விமர்சித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment