“நானே பொதுச்செயலாளர்;அடுத்த ஆட்சி அதிமுகதான்” – சசிகலா அதிரடி!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில்,அதிமுகவின் சட்டவிதிகளின்படி நானே பொதுச்செயலாளர் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா கூறுகையில்:”அதிமுகவின் சட்டவிதிகளின்படி நானே அடிமட்ட தொண்டர்களின் பொதுச்செயலாளர்.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்த காலத்தில் அவருக்கு நிறைய தொந்தரவுகள் ஏற்பட்டன.அதைப்போல புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நிறைய கஷ்டங்களை சந்தித்துதான் கட்சியை ஒன்று படுத்தி வழிநடத்தினார்.

அந்த வகையில்,அம்மாவின் மறைவுக்கு பிறகு தற்போது கட்சியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதிலிருந்து மீண்டு வந்து,ஒன்று சேர்ந்து நிச்சயமாக தமிழகத்தில் அடுத்த ஆட்சியாக அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment