எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்தார் – அமைச்சர் செல்லூர் ராஜு

  • கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. 
  • எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த வெங்காயம் மக்கள் மத்தியில் சிறிது பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அடுத்த வாரத்தில் 25000 மெட்ரிக் டன் வெங்காயம் நமது மாநிலத்தில் இருந்தே வர இருக்கிறது. சொட்டு நீர் பாசன முறையில் வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. போக போக வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும். எகிப்து வெங்காயம் இதயத்திற்கு மிகவும் நல்லது, எகிப்து வெங்காயம் குறித்து தவறான தகவல்களை பரப்பவேண்டாம் .எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வரே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.