இவர்களை குறித்து ஆலோசிக்கவில்லை! அதிமுக தலைமையில்தான் கூட்டணி – ஜெயக்குமார்

அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என ஜெயக்குமார் பேட்டி.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளியோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக தலைமையை ஏற்று கொண்டு வரும் கட்சிகள் கூட்டணியில் சேர்க்கப்படும் என்றார்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பற்றி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதுவும் ஆலோசிக்கவில்லை. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இல்லை. ஓ.பன்னீர்செல்வம் பற்றி ஆலோசனை நடத்தி எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதுபோல் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார் என்று விமர்சித்த ஜெயக்குமார், தேர்தல் நேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சட்டப்பூர்வமாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment