அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சி – எஸ்பி வேலுமணி

தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கு கண்டிக்கத்தக்கது என எஸ்பி வேலுமணி ட்வீட்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வெள்ளலூரில் மறைமுக தேர்தலின்போது அதிமுக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மறைமுக தேர்தலின்போது இந்த கடும் மோதலில் சிலருக்கு மண்டை உடைப்பு, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மோதலில் ஈடுபட்ட சிலரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளலூர் மறைமுக தேர்தல் மோதல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் மக்களின் அமோக ஆதரவோடு அதிமுக வெற்றி பெற்றது. பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றால், அதில் அதிமுகவே வெற்றி பெரும்.

அதிமுகவின் இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, தேர்தலை நிறுத்த சட்ட விரோதமாக தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறர்கள். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் நியாயமாக செயல்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்