கொரோனா அதிகரிப்பு..! “மத்திய அரசு தன் வேலையை சரியாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது”-ராகுல்காந்தி..!

நாட்டின் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க ,மத்திய அரசு தனது வேலையைச் சரியாக செய்திருந்தால்,வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசானது முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியாதவது,”நாட்டின் கொரோனா தொற்று நெருக்கடியைச் சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு தாங்கள் செய்ததாக மத்திய அரசு மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.ஆனால்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது வேலையைச் சரியாக செய்திருந்தால்,இந்த நிலை ஏற்பட்டிருக்காது”,என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக,அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, சிங்கப்பூர், சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் அனுப்பியுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இதனால்,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் ,பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா பெற்ற அனைத்து நிவாரணப் பொருட்களின் விவரங்களின் வெளிப்படைத்தன்மையை கோரி பிரதமர் மோடியை வலியுறுத்தினார்.