சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா! – சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!

டெல்லி போன்ற சூழல் தமிழகத்திலும் உருவாகலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் எச்சரிக்கை.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்றும் தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்த 10 பேரில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா என எல்லா இடங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது. கொரோனா தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது, டெல்லி போன்ற சூழல் உருவாகலாம் என்றும் எச்சரித்தார். இதனால் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்